உப்பு விளைவிப்பு 
தமிழ் நாடு

உப்பு விளையும் மண்ணில் அயோடின் பற்றாக்குறை... தமிழகத்தில் அதிக உப்பு, குறைவான அயோடின்!

ம.தினோவிகா

அயோடின் என்பது நம் மூளையின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான தனிமம் ஆகும். நம் உடலினால் தானாக அயோடினை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, நம் உடலுக்குத் தேவையான அளவு அயோடினை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அயோடின் சத்து நிறைந்தவை:

1) அயோடைடு உப்பு

2) பால், தயிர், மோர், நெய்

3) முட்டையின் மஞ்சள் கரு

4) கடல் உணவுகள்

5) மத்தி போன்ற கடல் மீன்கள்

நம் உடலில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது, அது தைராய்டு ஹார்மோனைப் பாதித்து காய்டர் எனப்படும் தைராய்டு சுரப்பி வீக்கம், குறைவாக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் ஹைப்போ தைராய்டிசம் உட்பட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, நம் உடலுக்குத் தேவையான அளவு அயோடின் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி, உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற அயோடின் குறைபாடு தடுப்பு தினத்தில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

"உப்பில் அயோடின் செறிவூட்டுவது நம் விதிப்படி கட்டாயம். செறிவூட்டப்படாத உப்பு விற்கும் கடைகள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உப்பளங்களில் விளையும் உப்பு நாடு முழுவதும் செல்கிறது. ஆனால், கடந்த 2018-19ஆம் ஆண்டு நடத்திய இந்திய அயோடின் ஆய்வில், போதுமான அளவு அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தும் குடும்பங்களின் விகிதத்தில் தமிழ்நாடு, நாட்டிலேயே கடைசி இடத்தில் உள்ளது.

தேசிய சராசரி 76% இருக்கும் நிலையில், தமிழகத்தில் அயோடின் கலந்த உப்பின் பயன்பாடு வெறும் 62% மட்டுமே. உப்பு விளையும் மண்ணில் அயோடின் பற்றாக்குறை இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில், பொட்டலமிடப்படாத, பெயரிடப்படாத பொட்டலங்களில் இருக்கும் கல்உப்பை நம் மாநிலத்தில் ஏராளமான குடும்பங்கள் பயன்படுத்துவதுதான் முக்கிய காரணம் என்று அறியப்பட்டது.

உப்பை திறந்த பாத்திரங்களில், வெயிலும் ஈரப்பதமும் படும்படி சேமிப்பதும், சமையலில் தொடக்கத்திலேயே உப்பைப் பயன்படுத்தி நீண்ட நேரம் கொதிக்கவிடுவதும்தான் காரணமாக அமைகிறது. ஒவ்வொரு படியிலும், அயோடின் கரைந்து மறைந்து ஆவியாகி விடுகிறது.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி நடத்திய ஆய்வில், நமது கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 13 கிராம் உப்பு உட்கொள்வதும், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் போதிய அளவு அயோடின் இல்லாத உப்பு பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அதிக உப்பு, குறைவான அயோடின் என்ற நிலை உள்ளது. இவை இரண்டையும் சரிசெய்ய வேண்டிய சவாலில் நாம் தற்போது இருக்கிறோம்." என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram