சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க உள்ளதை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:
"சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரத்து 264 தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவிற்குப் பதிலாக, நாளொன்றுக்கு உணவுப்படியாக ரூ 50 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 44 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தரமான, தங்களுக்குப் பிடித்த உணவை, தங்களுக்குத் தேவையான நேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உண்ண முடியும். எனவே. இது வரவேற்பிற்குரியது.
இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும்.
இந்த உணவுப்படித் தொகையை ரூ 50 லிருந்து ரூ 100 ஆக உயர்த்தி வழங்குவதோடு, மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்." என்று சி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.