கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்த பள்ளி மாணவிகள் 
தமிழ் நாடு

பேருந்திலிருந்து தள்ளிவிட்டதில் 10 பள்ளிக் குழந்தைகள் காயம்... புதுக்கோட்டையில் கொடூரம்!

Staff Writer

இன்று காலை புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாசத்திரம் அருகே அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திறந்ததில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து 10 பழங்குடியின பள்ளி மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்தப் பேருந்தின் ஓட்டுநர், கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளி விட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அந்த மண்டலத்தின் பொது மேலாளர், தெரியாமல் தானியங்கி கதவின் பொத்தானை யாரோ அழுத்தியதால் இந்த விபரீதம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை தொடர்ந்து, அந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரை இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியும் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தனது சமூக ஊடகப் பக்கத்தில், "பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல்.

கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதோடு, உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram