‘பா.ம.க. நிறுவனர் ராமதாசை வசைபாடுவது, ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு அழகுதானா' என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“தி.மு.க. அரசுக்கும் கவுதம் அதானிக்குமான உறவு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையை முன்வைத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின், ராமதாசை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காகப் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும்.
முதல்வர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன? அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ராமதாஸ்? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றம் அடைவதேன்? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா எனும் கேள்விக்கு, 'ஆம்! இல்லை!' எனும் பதிலைக் கூறாது, 'அவருக்கு வேறு வேலையில்லை' எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா?
பதில் சொல்ல நேர்மையற்ற முதல்வர் ஸ்டாலின், கேள்வி கேட்ட ராமதாசை நோக்கி, 'வேலையில்லை' எனப் பாய்வது அரசியல் அறம்தானா? எதிர்க்கட்சியாக இருக்கும் போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஸ்டாலின், அப்போது வேலையில்லாது தான் அறிக்கைகளை விடுத்தாரா? “எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா?
அதானி குழுமம் லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இப்போது வரை வாய்திறக்க மறுப்பதேன்? அதானி லஞ்சம் கொடுத்தாரெனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? இல்லை, மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களென்றால், அதானி குழுமத்திடமிருந்து தமிழகத்தில் லஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்வரே!
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்? ஆகவே, முதல்வர் ஸ்டாலின் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ராமதாஸ் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளார்.