"தமிழ்நாட்டு அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை :
"தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றைத் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.
நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க, கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்து வருவது ஏன்?
சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?
மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?
முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு?
அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா?
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை த.வெ.க. அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி.
இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது.
இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?
நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள்.
இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?
மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்." என்று சீமான் கூறியுள்ளார்.