கனிமொழி எம்.பி. 
தமிழ் நாடு

"எல்லா கட்சிகளுக்கும் தன்மானம் முக்கியம்"

Staff Writer

காங்கிரஸுக்கு தன்மானம் முக்கியம் என மாணிக்கம் தாகூர் சொன்ன கருத்துக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் முன்பைவிட அழுத்தமாக முன்வைத்த நிலையில், திமுகவுடனான அதன் கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இது ஒருபுறமிருக்க தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கு இசைவாகவும் கட்சியில் ஒரு தரப்பினர் பேசிவந்தனர். காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் வைத்த இந்த கருத்துக்கு, திமுக தரப்பிலிருந்து மாற்றுக் கருத்துகள் வந்தன. இதனால், மாற்றிமாற்றி இருதரப்பிலும் சங்கடமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனால், இந்த கூட்டணி நீடிக்குமா அல்லது காங்கிரஸ் அணி மாறப் போகிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், கூடுதல் தொகுதி என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்தச் சூழலில், டிசம்பர் மாதமே தொகுதிப் பங்கீடு தொடர்பாக தாங்கள் பேசத் தொடங்கியும், இதுவரையில் திமுக தரப்பில் உறுதியான பதில் இல்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளார் கிரீஷ் சோடங்கர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். அதற்கு மறுநாளே திமுக துணை பொதுச்செயலரும், திமுகவின் டெல்லி முகமாக முன்னிறுத்தப்படுபவருமான கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்று அதிகாரபூர்வமாக இருவரும் எதுவும் சொல்லவில்லை.

இந்தநிலையில்தான் இன்று, 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனிமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை; உறவு சுமுகமாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தன்மானமே முக்கியம் எனக் கூறிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லாருக்கும் தன்மானம்தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.