இடைத்தேர்தலில் வாக்களிக்க த.வெ.க.தான் அதிக பணம் கொடுக்கிறது என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இடதுசாரிகள் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
"பொதுவாக எந்தவொரு பிரச்னையிலும் வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்ற கொள்கையை த.வெ.க. கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறது. பா.ம.க. தொடர்பான சர்ச்சையிலும், இவர்கள் இதையே செய்கிறார்கள்.
நேற்று மதுராந்தகத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது, நாங்கள் வெறும் நோட்டீசை மட்டும் கொடுத்தோம். எதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம், எங்கள் கொள்கைகள் என்ன, ஏன் நாங்கள் போட்டியிடுகிறோம் என்பதை விளக்கி நோட்டீஸ் கொடுத்தோம்.
ஆனால், சில கிராமங்களில் இருந்த மக்கள் மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வெறும் நோட்டீஸை மட்டுமே கொடுக்கிறீர்கள் என்று தெரிவித்தார்கள். அப்போது அவர்களிடம், எந்தெந்தக் கட்சிகள் பணம் கொடுக்கின்றன என்று நான் கேட்டேன்.
இருப்பதிலேயே அதிகமாக ஓட்டுக்குப் பணம் கொடுத்தது, த.வெ.க.தான் என்று மக்கள் தெரிவித்தனர். தூய சக்தி, ஓட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்றுதான் கடந்த தேர்தலிலும் முதல்வர் பிரசாரம் செய்தார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மதுராந்தகத்தில் பொதுமக்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இது.
'த.வெ.க. அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்' என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
எங்கள் கட்சியின் பலம், கொள்கைகள் குறித்து கூறிவிட்டு, இடதுசாரிகள் எந்த சூழலிலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறினோம்.
இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கட்சித் தலைவர்களும் பதில் சொல்ல வேண்டும்." என்று பெ.சண்முகம் கூறினார்.