இந்திய தேர்தல் ஆணையம் 
தமிழ் நாடு

தமிழ்நாட்டுக்கும் SIR... தேர்தல் ஆணையம் முடிவு! எப்படி செய்யப் போறாங்களோ?

Staff Writer

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்வதற்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பாக 2 நாட்கள் மாநாடு செப்.22 -23 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. அதில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், யூனியன் பிரதேசத் தேர்தல் அதிகாரிகள், இந்திய தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை செயல்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையர் கேட்டு தெரிந்துகொண்டார். அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளது.

தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னர் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான தேதிகள் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.