தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் கோவை மெட்ரோ திட்டத்துக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அதை திமுக கிடப்பில் போட்டது. 2024ஆம் ஆண்டு தான் மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தார்கள். அதில் குறைபாடு இருந்ததால் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. 2011 மக்கள் தொகையின் அடிப்படையில் அறிக்கையை அனுப்பியதால்தான் இந்த குளறுபடிகள். மாநில அரசின் கவனக்குறைவும் அலட்சியமும் தான் இதற்கு காரணம். திமுக அரசு விழிப்போடு இருந்து சரியான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு நிரந்தர டிஜிபி இல்லாத காரணத்தினால் தான் சட்ட ஒழுங்கு சரியில்லை. தங்களுக்கு வேண்டியவரை நியமிக்க இந்த அரசு முடிவெடுத்து இப்படி செயல்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை யார் விசாரித்தால் என்ன? சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் போகிறது திமுக அரசு. அப்படியெனில் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதில் யாரோ ஒரு முக்கியப் புள்ளி இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை. தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பாகம் எண் 115 காயத்ரி நகர் 3ஆவது தெரு, கதவு எண் 1இல் மட்டும் 360 வாக்குகள் ஒரே வீட்டில் இடம்பெற்றுள்ளன. அதே தொகுதியில் பாகம் எண் 117இல் மற்றொரு வீட்டில் 150 வாக்குகள் இருக்கின்றன. இதுபோன்ற வாக்குகளையும் எல்லாம் களைய வேண்டும். இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளும் போது ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
இதனால் சில மாவட்ட ஆட்சி தலைவர்களும், சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களும் முறையாக இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் நேர்மையாக எப்படி பணிகள் நடைபெறும். முறையாக எப்படி வாக்காளர்களை சேர்க்க முடியும். இது வெட்கக்கேடான செயல்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடைபெறக் கூடாது என வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் முறையாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.