தமிழகத்தில் காற்றாலை, சூரிய மின்னாற்றல் மட்டும் 40% மாநிலத்தின் மின்சாரத் தேவையை நிறைவு செய்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து காற்றாலை உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதேபோல சூரிய மின்னாற்றல் உற்பத்தியும் தினசரி 60 மில்லியன் யூனிட்டைக் கடந்துள்ளது.
இவை இரண்டும் இணைந்து தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பெரும் பங்காற்றி வருகிறது.
இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த தினசரி காற்றாலை மின்சார உற்பத்தி, கடந்த ஜூலை 3ஆம் தேதி 124.34 மில்லியன் யூனிட் ஆகும். இதேபோல் சூரிய மின்னாற்றல் உற்பத்தியும் கடந்த ஜூலை 6ஆம் தேதி 60.4 மில்லியன் யூனிட் என்ற அளவை எட்டியது.
இதுவரை இல்லாத உச்சபட்ச உற்பத்தியாக இது குறிப்பிடப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும் சூரிய மின் உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
எல் நினோவின் தாக்கத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 10% முதல் 15% வரை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், முன் எப்போதையும்விட உற்பத்தி உச்சத்தை எட்டி வருகிறது என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே. வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.