பறவைக் காய்ச்சல் 
தமிழ் நாடு

கடலூர், சென்னை, கோவை... கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்!

Staff Writer

கடலூர் மாவட்டத்தை அடுத்து சென்னை, கோவை மாவட்டங்களில் பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றன.

கோவையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கோவை சித்தாபுதூர் பி.கே. நகரில் உள்ள ஓடைக்கு அருகே 14 குளத்து நாரைகள் கடந்த 18ஆம் தேதி இறந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, இறந்த நாரைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில், பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாரைகள் இறந்துகிடந்த இடத்தைச் சுற்றிலும் 1 கி.மீ. தொலைவிற்கு எந்த கோழிப் பண்ணையும் இல்லை என்பதும், எந்தக் கோழியின் இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக-கேரள எல்லை முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து, சிறப்புக் கால்நடை மருத்துவக் குழுக்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளும் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதையொட்டி, கிண்டி சிறுவர் பூங்கா நாளை மறுநாள்வரை அல்லது மறுஉத்தரவு வரும்வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram