இடிந்தகரையில் சீமான் - உதயகுமாரன் 
தமிழ் நாடு

சீமானைவிட சன்னிலியோனுக்குதான் கூட்டம் அதிகம் - சுப.உதயகுமாரன் கலாய்!

Staff Writer

சீமானுக்குக் கூட்டம் வருகிறது என்கிறீர்களே... சன்னி லியோனைக் கூட்டிவந்தால்கூட அதிகம் பேர் திரள்வார்கள்; அதற்காக அவரைத்தலைவராகஆக்கமுடியுமா என்று பச்சைத்தமிழகம் கட்சியின்தலைவர் சுப.உதயகுமாரன் கேட்டுள்ளார். 

அண்மையாக, சீமானின் நா.த.க.வினருக்கும் உதயகுமாரனுக்கும் இணையத்தில் கருத்துமோதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ’ஒரு தன்னிலை விளக்கமும், ஓர் அன்பான வேண்டுகோளும்!” எனும் தலைப்பில் உதயகுமாரன் இன்று சமூக ஊடகத்தில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.  

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்களுக்கும், எனக்கும் எந்தவிதமான தனிப்பட்டப் பிரச்சினைகளோ, கோபதாபங்களோ கிடையவே கிடையாது

எங்களுக்குள் கொடுக்கல் வாங்கலோ, வாய்க்கால் வரப்புப் பிரச்சினைகளோ எதுவுமில்லை. ஒரு பெரிய கட்சியின் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கும் அவரை நான் ஓர் எதிரியாகப் பார்க்கவுமில்லை. அவருக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.

அவரும், அவரது கட்சியினரும், தமிழ்த்தேசியம் எனும் இக்காலத்தின் தேவையான விழுமியத்தை அழித்தொழித்து விட்டார்களே என்கிற ஆதங்கம்தான் என்னை வருத்துகிறது. அவர்கள் சனநாயகத்தில் முழு நம்பிக்கை உடையவர்கள் அல்ல என்கிற அச்சம்தான் மிரட்டுகிறது. இவர்கள் கைகளுக்கு அதிகாரம் வந்து சேர்ந்தால், அது தமிழினத்தின் மாபெரும் அழிவாக அமைந்துவிடும் என்கிற பயம்தான் என்னை வாட்டுகிறது.

ஈழ இனப்படுகொலை நடந்த நிலையில் தமிழ் (நாட்டு) மக்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையேப் பீறிட்டு எழுந்த இனஉணர்வின் எழுச்சியை, இங்கிருக்கும் ஏற்பாட்டுக்கு (establishment) எதிரானக் கொந்தளிப்பை எல்லாம், சினிமாத்தனமானப் பேச்சுக்களால், சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் அப்படியே மடைமாற்றி, இந்திய உளவுத்துறைகளுக்கு அடியாள் வேலை செய்து கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள்.

சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் என்னென்ன உதவிகள் செய்து தந்தார்கள், காஷ்மீரிலிருந்து யாசின் மாலிக் போன்றோரை எப்படி தமிழ்நாட்டுக்கு அழைத்துவர முடிந்தது என்றெல்லாம் தமிழ்நாடே விவாதித்தது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்த இராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பொதுமேடையில் அறிவித்துவிட்டு, வெளிநாட்டுப் பணம் பெற்று கட்சி நடத்த முடிகிறது என்றால், தில்லி அதிகாரப்பீடத்தின் ஆதரவோடுதான் அனைத்தும் நடக்கின்றன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா என்ன?

ஆரியத்திடமும், திராவிடத்திடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தை அதிகாரவெறி பிடித்த அவர்களின் அண்ணனுக்கு அடிமையாக்க முனைந்து தோற்றுப்போய் விட்டார்கள். தோற்றுப்போக வேண்டும் என்பதுதான் இந்தியத்தின் கட்டளையும்! அதுகூடப் புரியாத வெள்ளந்தித் தம்பிகள் நெய்தல் படை வரும், தமிழீழம் வரும் என்றெல்லாம் சொல்லப்படும் கதைகளைக் கேட்டு கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் தம்பிகள் உழைத்துச் சம்பாதித்தப் பணத்தையும் வாரி இறைக்கின்றனர்.

தமிழ்த் தேசியம் எனும் ஒர் அற்புதமான விடுதலை விழுமியத்தை, அரசியலை, நகைச்சுவைப் பொருளாக்கியதுதான் இவர்கள் அனைவரின் வாழ்நாள் சாதனை. தமிழ்த் தேசியர் என்றாலே, "ஐயோ பாவம், ஓர் அரைகுறை" என்றே பெரும்பாலான தமிழர்கள் நம்மைப் பார்க்கிறார்கள். காரணம் தேசியஇன விடுதலை அரசியலை அறிவியல் ரீதியாக விளக்கி, தர்க்கபூர்வமாக விவாதித்து, மக்கள் மனங்களை மாற்றுவதை விட்டுவிட்டு, காட்டுக் கத்தல் கத்தி, பொய்யும் புரட்டும் சொல்லி, "நான், எனது, என்னை" என்று தன்னைப் பற்றியேப் பேசி, கோட்பாட்டு அரசியலை, கோடம்பாக்கம் அரசியலாக மாற்றியவர்கள் இவர்கள் அனைவரும்.

"அவருக்குத் தான் கூட்டம் சேருகிறது, அவருக்குத்தான் ஒருங்கிணைக்கும் திறன் இருக்கிறது" என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டுகிறீர்கள் சிலர். சன்னி லியோன் வந்தால் இன்னும் கூட்டம் சேருமே, மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்து ஒருங்கிணைப்பாரே? அதற்காக அவரை அழைத்துவந்து தலைவராக்க முடியுமா? கூடும் கூட்டம் முக்கியமல்ல, கூட்டும் தன்மைகள் மிக முக்கியம்.

நம்மவர் ஒருவரை நாமே பலவீனப்படுத்தக் கூடாது, கண்டும் காணாமல் போய்விடுவோம் என்பது வேறு சிலரின் வாதமாக இருக்கிறது. நம்மவர் என்கிற ஒரே காரணத்துக்காக இங்கே யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மவர் நல்லவராகவும் இருத்தல் வேண்டும்.

அன்பும், அறமும், அழகும், அறிவும், தொன்மையும், சிறப்பும் நிறைந்து, பல்லாயிரம் ஆண்டுகளாய் நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு கண்ணியமானச் சமூகத்தை வழிநடத்துபவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும். அவை இல்லாதவர்களைத் தூக்கி நிறுத்தி, விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை ஏற்க இயலாது.

நாம் செய்ய முனைவது வெற்றிகரமான திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் வேலை அல்ல. மாறாக, நமது இளைஞர்கள், குழந்தைகள், அவர்தம் வருங்காலம், வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு குறித்த ஆயிரம் காலத்து அரசியல் பணி.

உடனே, இவனுக்கு பொறாமை, ஆற்றாமை என்று மனோதத்துவ விளக்கங்கள் சொல்கிறார்கள் சிலர். நான் யாருக்கும் தலைவராகி, முதல்வராகி, உங்கள் மண்ணை என் கைகளில் சிக்கவைத்து, என்னை உணர வேண்டிய பரிதாப நிலை கொண்டவனல்ல. தத்துவஞானிகளை, தகைசால் அறிஞர்களைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன் என்று சொன்னால் பரவாயில்லை; இவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் என்பது முற்றிலும் தவறானது.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். வெறுப்பு, கோபம், வன்மம் போன்ற எதிர்மறை உணர்வுகளை; வெறும் பேச்சு, வேடிக்கையான நடிப்பு, வாய்ச்சொல் வீரம் போன்ற போலி பித்தலாட்டங்களை எல்லாம் எள்முனையளவும் ஏற்றுக் கொள்ளாத தமிழ் மக்களை இவர்கள் சற்றும் புரிந்துகொள்ளவில்லை.

தன் மனதில் கொப்பளிக்கும் உள்ளக்குமுறலை மேடையில் ஒருவர் உரக்கப் பேசுகிறாரே என்கிற ஒரே காரணத்துக்காக சில இளைஞர்கள் கைத்தட்டி ரசிக்கிறார்கள், வாக்கும் அளிக்கிறார்கள். ஆனால் பக்குவமும், முதிர்ச்சியும் பெற்றதும், அவர்களும் விலகிச் சென்று விடுகிறார்கள். நீங்கள் இவர்களில் யாரையும் தேர்வதும் இல்லை, தலைவராக உருவாக்குவதும் இல்லை. திரைப்பட நடிகரின் ரசிகர் மன்றம் ஒன்று அங்கே தாண்டவமாடும் பக்தி, பரவசம், வழிபாட்டு மனநிலை, கலாச்சாரம் போன்றவற்றோடு எந்த புரட்சியையும், மாற்றத்தையும் கொண்டுவர இயலாது.

இன்னோரன்ன காரணங்களால், ஐந்தாறு விழுக்காடு வாக்குகளோடு நாதக உறைந்து போனது மட்டுமல்ல, தமிழ்த் தேசியம் எனும் விழுமியத்தையும் உறையச் செய்துவிட்டார்கள். அது சவலைப் பிள்ளையாகி சாய்ந்துக் கிடக்கிறது.

நாதக தம்பிகளில் பலரையும் நான் நன்கறிவேன். அவர்கள் நல்லவர்கள், நம் மக்களைப் பற்றிய உண்மையானக் கரிசனம் கொண்டவர்கள் என்று எனக்குத் தெரியும். என்னைத் திட்டுவதை விடுத்து, உங்கள் தலைமையோடு ஒரு கருத்துப் பரிமாற்றம் நடத்துங்களேன்.

கூட்டுத்தலைமை, கூடி முடிவெடுக்கும் தன்மை, சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், சாதிமறுப்பு, சமூகநீதி போன்ற அடிப்படைகளோடு ஒரு புதிய பயணத்தை அனைவருமாய் மேற்கொள்வோம். தமிழக அரசியல் களம் “விஜய்- உதய்” என்று மாறிவிட்டிருக்கிறது. இன்னும் குட்டிச் சுவராவதற்கு முன்னால், அந்தப் பயணத்தை அனைவருமாய்த் தொடங்கலாமே? தன்னை அல்லாமல், தமிழக மக்களை மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கிறவர்கள், செயல்படுகிறவர்கள் ஒன்று கூடுவோமா?

என்னைப் பொறுத்தவரை, வெறும் வேலைக்காரனாக மட்டும் உங்களோடு இணைந்து பணி செய்வதற்கு நான் அணியமாக இருக்கிறேன். எனக்கு எந்தப் பதவியோ, பொறுப்போ, சம்பளமோ, வாகனமோ, வேறு எதுவுமோ வேண்டாம். தமிழ் மக்களின் விடுதலை மட்டும் போதும்!” என்று சுப. உதயகுமாரன் கூறியுள்ளார்.