மத்திய பிரதேசத்தில் 25 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமத்தை ரத்து செய்து, ஆலையை இழுத்து மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனம் இங்கி வந்தது. இந்த நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், இந்த நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்தை குடித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் 25 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய தமிழக உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபா ஜோசஃபின் திருவான்மியூர் வீடு, இணை இயக்குனர் கார்த்திகேயனின் அண்ணா நகர் வீடுகளிலும் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்த ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.