தமிழ் நாடு

‘ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை...' - பிரசாரத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்!

Staff Writer

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நேற்று பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நேற்று பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.

இதற்கான தொடக்க விழா, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் மாலையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது

இதைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தவறான நீதி சொன்ன ஆட்சிக்கு எதிராக கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் இருந்து இப்பயணம் தொடங்கியள்ளது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேலுக்கு பிறகு வந்த இரும்பு மனிதராக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அவரால் தான் ஆர்டிக்கல் 370 ரத்து செய்ய முடிந்தது. திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார். திமுகவை மக்களே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவர் என அமித்ஷா அன்றைக்கே தெரிவித்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை. வெறும் காட்சிகள் தான் நடக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய போதே திமுகவுக்கு முன்னுரை எழுதிவிட்டார். பாஜவின் இந்த நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும். இன்னும் 177 நாட்கள் தான் உள்ளன. ஒவ்வொரு நாளும் நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த பிரசாரத்தின் நோக்கமே 2026இல் நாம் (கூட்டணி) எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியா நடக்கிறது. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார் ஸ்டாலின். மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசு உறவு வேண்டும். 'உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு தோள் கொடுப்போம்' என மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.சொன்னார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து ரூ.40 ஆயிரம் கோடி நிதி பெற்றுத்தந்தார். டபுள் இன்ஜின் அரசு தான் மாநில வளர்ச்சிக்கு தேவை.

இது புரியாமல் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து, தமிழை விற்று திமுகவினர் பிழைப்பு நடத்துகிறார்கள். கச்சத்தீவை தாரைவார்க்க துணை போனவர்கள்.

மின் கட்டணம், சொத்துவரிகள் தான் உயர்ந்துள்ளன. போதைப் பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் வளர்ச்சி.

கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன். ஏனென்றால் அந்த சம்பவம் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அங்கு நடந்த

உயிர்ப் பலிகளுக்கு திமுக காரணம். இதையெல்லாம் சிந்திக்க வைக்கவும், திமுக வின் மோசமான ஆட்சியை அகற்றுவதற்காக தான் இப்பயணம். எங்களுக்கு மக்கள் மனதில் இடம் உள்ளது என்றார்.

நயினார் நாகேந்திரன், இன்று 13ஆம் தேதி சிவகங்கை, 14ஆம் தேதி செங்கல்பட்டு வடக்கு, 15ஆம் தேதி சென்னை வடக்கு, 16ஆம் தேதி மத்திய சென்னையிலும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதையடுத்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வரும் 24ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், 25ஆம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27ஆம் தேதி திருச்சி, 28ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29ஆம் தேதி நாமக்கல் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஈரோடு தெற்கு, 4ஆம் தேதி கோவை வடக்கு, 5ஆம் தேதி நீலகிரி, 6ஆம் தேதி திருப்பூர் தெற்கு என தொடர்ந்து 28 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நயினார் நாகேந்திரன், நவ.22ஆம் தேதி தூத்துக்குடி தெற்கில் நிறைவு செய்கிறார். பின்னர் இரண்டாம் கட்ட பயணத்தை தேனியில் நவ.24ஆம் தேதி தொடங்குகிறார்.