தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

ஸ்டாலின் அட்டாக்... விஜய் எடுத்த அஸ்திரம்!

Staff Writer

“சென்னையில் டெல்லி…டெல்லி என கூவுவது, அடிக்கின்ற கொள்ளைக்கு ரெய்டு வந்துட்டாவில் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பது யார் என்று மக்களுக்கு தெரியும்.” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தவெக தலைவர்கள் விஜய் கலந்து கொண்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் தஞ்சாவூரை அடுத்த செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நான் என்ன பேசினாலும் அதை திரித்து தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னையில் டெல்லி…டெல்லி என கூவுவது, அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துட்டாவில் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பது யார் என்று மக்களுக்கு தெரியும்.

எனக்கும் மக்களுக்கும் இடையில் யாராலும் நுழை முடியாது. இந்த உறவு அப்படிப்பட்டது. இது தேர்தலுக்காக வந்த உறவு இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது தேர்தலாக இருக்கலாம். எனக்கும் என்னை நேசிக்கின்ற மக்களுக்கும் இது எமோசன்.

டெல்டா - டால்டா

எனக்கு அடுத்த ஜென்மம், மறுபிறவி பற்றியெல்லாம் தெரியாது. அது உண்மை என்றால் அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.

எனக்கு விவசாயம் குறித்து தெரியாதுதான். ஒத்துக்கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என்று சொல்லி காதில் டால்டா ஊற்ற வரவில்லை.

மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்லியுள்ளது. மணல் மாஃபியா குரூப்புக்கு ஆதரவு அளிப்பது யார்? திமுகதானே. அதை திமுகவால் மறுக்க முடியுமா? திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப்போகிறது.

பரந்தூர் பிரச்னையில், மேல் மா பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்ன? பெரிய பெரிய திட்டங்களை எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனேயே திமுகவினர் செய்யமாட்டார்கள். கடைசி காலத்தில் செய்ய முயற்சிப்பார்கள். பிறகு ஆட்சியை இழந்ததும், நாங்கள் தான் ஆட்சிக்கு வரவில்லையே என்பார்கள்.

கருத்து சொல்லிக்கொண்டு கம்பு சுத்திக்கொண்டு இருந்தால் எல்லாமே நடந்துவிடுமா?

மீனவர்கள் பிரச்னையில் கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒன்றிய அரசுக்கு உணர்ப்பூர்வமான, உண்மையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நம் மீனவர்கள் மீது அவர்கள் கை வைக்க விடக்கூடாது.

அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் சொல்கிறார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. இரண்டாவது முறை வந்ததாக வரலாறே கிடையாது. சீனப்பெருஞ்சுவர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை விட விஷயம் திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது. ஆனானப்பட்ட அவருடைய அப்பாவாலேயே முடியவில்லை.

ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னையில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட பூசி மெழுகி பட்டும் படாமல் குரல் கொடுத்தார். குரல் கொடுத்த எல்லோருக்கும் என் நன்றி.

தவெக ஆட்சிக்கு வந்தால்

* தவெக ஆட்சிக்கு வந்தால், டெல்டாவில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் ஆக்குவோம்.

* 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் முழுமையாக ரத்து செய்யவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனை 50% வரை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.

* 2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலம் அற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, ஒன்றிய அரசு ஊழியராக இல்லாத நிலையில், அவர்களுடைய குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகையான படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும்.

* விவசாயிகள் விருப்பத்துக்கு எதிராக எந்த திட்டம் இருந்தாலும், ஒன்றிய அரசே அழுத்தம் கொடுத்தாலும் அதை தவெக முழுமையாக நிராகரிக்கும்.

* கொள்முதல் நிலையங்களில் நெல் முறையாக பாதுகாக்கப்படும்

* போதுமான கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஏற்றவும் இறக்கவும் கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்.

* கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார்.

* ரேஷனில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

* மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான உண்மையான உணர்ப்பூர்மான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு தவெக கொடுக்கும்.

* கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை பிரச்னைகளுக்குத்தான் தவெக முன்னுரிமை கொடுக்கும்.

* அரசு வேலை மட்டுமில்லை, தனியார் துறையிலும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

* ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த முயற்சிப்போம்.