முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

7ஆவது முறை ஆட்சி… 200 இடங்களில் வெற்றி – திமுக செயற்குழுவில் ஸ்டாலின் பேச்சு!

Staff Writer

’ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு' என தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. இதற்கென தொண்டர்கள் உழைக்க வேண்டும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி நமதே. 2026இல் வெற்றி பெறுவது நமது கூட்டணி தான். தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசும் துணிவு பழனிசாமிக்கு இருக்கிறதா? தி.மு.க. என்றால் மட்டும் பழனிசாமி, கத்திப் பேசுகிறார். தி.மு.க.என்றால் கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான் அடிப்படை. பழனிசாமியின் அரசியலுக்கு என்ன அடிப்படை? துரோகத்தை தவிர பழனிசாமிக்கு பெருமையாக சொல்ல என்ன உள்ளது? காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார் பழனிசாமி.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் உயர்திருப்பதாக பழனிசாமி பேசுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசும் துணிவு பழனிசாமிக்கு இருக்கிறதா? டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வை கண்டித்தாரா பழனிசாமி? அ.தி.மு.க., 2019ஐ விட, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 12.58 சதவீத ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளது.

14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அ.தி.மு.க., நியாயமாக 32.98 சதவீத ஓட்டுக்களை பெற்று இருக்க வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க்கணக்கை அவழித்துவிட்டிருக்கார் பழனிசாமி. பழனிசாமி சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.வினரே நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். முதல்வர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக.வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக உள்ளது. சமூக வலைதளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும்.

வரும் தேர்தலில் நம் கூட்டணி பெறும் வெற்றி, தமிழகத்திற்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி. தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகி கொண்டு இருக்கிறது. இவ்வாறு உதயநிதி பேசினார்.