பராசக்தி திரைப்படம் 
தமிழ் நாடு

பராசக்தி படம் தந்த பலன் - பொள்ளாச்சியில் நனவாகும் கனவு!

Staff Writer

சிவகார்த்திகேயன் நடித்து ஓடிய பராசக்தி திரைப்படம் மூலம் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மொழிப் போராட்ட வரலாறு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்தப் படம் வெளியானதை முன்னிட்டு மொழிப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் மொழிப்போர்த் தியாகிகளுக்கு நினைவுச் சின்னமோ நினைவிடமோ இல்லாத இடங்களில் குறைந்தபட்ச அடையாளத்தையாவது நிறுவ வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. 

இந்தப் பின்னணியில், சில நூறு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பொள்ளாச்சி மொழிப் போராட்டத்தில் தியாகியானவர்களை நினைவேந்துவதற்கு அந்த வட்டாரத்தில் ஒரு இடம்கூட இல்லை. இதை பொள்ளாச்சி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மொழியின அமைப்பினர், தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் அண்மையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இதைப் பரிசீலித்த பொள்ளாச்சி நகராட்சி, அரசாங்கத்துக்கு கருத்துருவை அனுப்பியது. அதைக் கருத்தில்கொண்ட மாநில அரசு இதற்கான இடத்தைத் தேர்வுசெய்வதற்காக பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் முதலிய நான்கு பேர் குழுவை அமைத்தது. 

அக்குழு பொள்ளாச்சியில் உள்ள பல்லடம் சாலையில் இரவுண்டானா பகுதியைப் பரிந்துரை செய்துள்ளது. 

அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் அந்த இடத்தில் மொழிப் போராட்டத் தியாகிகளுக்கான நினைவிடமோ நினைவுச்சின்னமோ அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.