முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி 
தமிழ் நாடு

தமிழர்கள் மீதான வன்மத்தை நிறுத்துங்க... மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!

Staff Writer

எங்கு சென்றாலும் பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துகின்றனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, "கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான திமுகவும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.