மழை 
தமிழ் நாடு

சில மணி நேரங்களில் உருவாகிறது புயல்! – வானிலை ஆய்வு மையம்

Staff Writer

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 3 மணி நேரத்தில் புயல் வலுப்பெறுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தற்போது நாகப்பட்டினத்தின் கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென் கிழக்க 360 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் புதுவை இடையே அதாவது காரைக்கால்- மகாபலிபுரம் இடையே நாளை (நவ.30) பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும்.” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த புயலுக்கு ஏற்கெனவே பெங்கல் புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மழையின் காரணமாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.