தமிழ் நாடு

கால் முறிந்த தெருநாய்... பி.டி.ஆரின் கருணைக்கு குவியும் பாராட்டுகள்!

Staff Writer

கால்முறிந்த தெருநாய்க்கு சிகிச்சை அளித்து அதனை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 2021இல் அமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, எனது அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, கால் உடைந்த நிலையில் நாய் ஒன்றைக் கண்டேன். அது தலைமைச் செயலகத்தில் இருந்த பல நாய்களில் ஒன்று. விபத்தொன்றில் அதன் கால் உடைந்துவிட்டதாக கூறினார்கள்.

கால்முறிந்த நாய்க்கு சிகிச்சைக்கு சில மாதங்கள் ஆனது. சிகிச்சையில் மெட்டல் பிளேட் மற்றும் ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் பழைய இடத்திற்கே அந்த நாயை அனுப்ப எங்களுக்கு மனது வரவில்லை. அதனால் நாய்க்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம். அந்த நாய் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டது.

சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செயலகத்தில் இருந்த நாய்கள் பெருமளவில் அகற்றப்பட்டன. அவைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தெரியவில்லை. 'பீச்சஸ்' இப்போது சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வமாக எங்களது வளர்ப்புப் பிராணியாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.