மாணவர் தேர்தல் 
தமிழ் நாடு

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்!

Staff Writer

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த நவம்பர் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவர் தேர்தல் இந்த மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படைச் செயல்முறைகளை மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித் துறையால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்தலின் மூலம் மாணவர்கள் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியிடுதல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, மாணவர் அமைச்சரவை அமைத்தல் உட்பட்ட முழுமையான தேர்தல் நடைமுறைகளைத் தெரிந்துகொள்வார்கள்.

'மகிழ் முற்றம்' திட்டத்தின் கீழ் இந்த மாணவர் நாடாளுமன்ற அமைப்பு செயல்படுத்தப்படவுள்ளது. பள்ளி நிர்வாகத்தில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதோடு, தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஜனநாயக விழிப்புணர்வை வளர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் இல்லங்கள் தொடர்ந்து செயல்படும்.

இல்லத் தலைவர்களுக்கான தேர்வு ஜூலை 3-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.

ஜூலை 6-ஆம் தேதி பிரச்சாரம் செய்வார்கள்.

ஜூலை 7 அன்று, அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் ஐந்து அவைகளில் ஒவ்வொன்றிற்குமான மாணவர் அமைச்சரைத் தனித்தனி வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.

வேட்பாளர்கள் கல்வி, மாணவர் நலன் - பாதுகாப்பு, தகவல் - தொடர்பு, சுற்றுச்சூழல் - காலநிலை நடவடிக்கை, சுகாதாரம் - தூய்மை ஆகிய ஐந்து துறைகளுக்காகப் போட்டியிடுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாணவர் அமைச்சர்களிடையே குலுக்கல் முறையில் இத்துறைகள் ஒதுக்கப்படும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லத் தலைவர்களும் மாணவர் அமைச்சர்களும் ஜூலை 10 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram