அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் 
தமிழ் நாடு

அயலக உயர்கல்வித் திட்டத்தைச் சிதைக்க ஏன் இந்த வெறி?- மு.க.ஸ்டாலின்

Staff Writer

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் த.வெ.க. அரசு இழுத்தடிப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழிபோட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?

துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!" என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி "திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்குக் கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

வழக்கம்போல பில் வரவில்லை - மெயில் வரவில்லை என்று ஆதி திராவிடர் - பழங்குடியின மாணவர்கள் மீது பழிபோட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram