காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 12,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி நீர் திறந்துவிட, கர்நாடக அரசு மறுப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல, தமிழகத்திற்கு வரவேண்டிய பற்றாக்குறையான 11 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை என மூன்றாவதாக ஒரு மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் குறித்த விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்குமார், அபரேஷ்குமார் சிங் ஆகியோரின் அமர்வு, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் இன்னும் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியது.
இதனைத்தொடர்ந்து, 11 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்ற மனு, காவிரி ஆணையத்தின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.