உச்சநீதிமன்றம் 
தமிழ் நாடு

எஸ்.ஐ.ஆர். - திமுக வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Staff Writer

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் பீகாரில் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தற்போது எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது, “தமிழ்நாட்டில் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது. பல லட்சக்கணக்கான விண்ணப்ப படிவங்களை ஒரே நேரத்தில் இணையதளத்தில் ஏற்ற முடியாது. பல மலை கிராமங்களில் இணைய வசதியும் இல்லை; கால அவகாசம் போதுமானதாக இல்லாத நிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, எஸ்.ஐ.ஆர் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், திமுக மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடரலாம் என்று கூறிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவ. 26க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதிமுக மனு நிராகரிப்பு

எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவை ஆதரித்து தங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அதிமுகவின் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

அதிமுக வேண்டுமானால் ரிட் மனு தாக்கல் செய்யலாம். இல்லையெனில் வாதிட அனுமதிக்க முடியாது என்ற கூறி அவர்களின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.