உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது AI generated
தமிழ் நாடு

பிசி முஸ்லிம்- அரசமைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு : மு.வீரபாண்டியன்

Staff Writer

இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

" இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட மதநம்பிக்கை, மத வழிபாட்டிற்கான சுதந்திரத்தை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் பகுதி III-ல் உள்ள பிரிவுகள் 25 முதல் 28 வரை சமயம் சார்ந்த உரிமைகளைப் பற்றி விரிவாக விளக்குகின்றன.

இந்த நிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் தங்களின் முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகைகளைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

மதம் மாறியோர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அமர்வு தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு என்பது மத அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. சமூகரீதியாக கல்விரீதியாக பின்தங்கியோர் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

சாதியப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புகள், ஒரு குறிப்பிட்ட மதம் என்றில்லாமல், இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நிலவிவருகிறது. மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரின் சமூகரீதியாக, கல்விரீதியாக பின்தங்கிய நிலை மாறி விடுவதில்லை.

இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைத் தழுவிய பட்டியல் சாதியினர் அனைவரும் சமூகரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவேதான் நமது அரசியல் சட்டம், சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது. இவற்றை, கவனத்தில்கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது.

எனவே, மதம் மாறிய போதிலும் ஏற்கெனவே பெற்றுவந்த அதே இட ஒதுக்கீட்டு உரிமைகளை பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்டோரும் தொடர்ந்து பெறும் வகையில் உடனடியாக அரசியல் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்." என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram