பறவைகள்  நன்றி: உயிர் சண்முகானந்தம்
தமிழ் நாடு

2025 கணக்கெடுப்பில் 2.3 இலட்சம் பறவைகள்!

Staff Writer

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 2.3 இலட்சம் பறவைகள் பதிவாகியுள்ளன. 

உள்நாட்டுப் பறவைகள், வலசைவரும் பறவைகள் என இரண்டிற்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பு - கண்காணிப்பு என்பது மிக முக்கியமான பணியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருவாட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) உள்ள வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம்,   மரக்காணம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப் பல்வகைமையைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில், மார்ச் 15 மற்றும் 16 (2025) ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள 1093 நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வலசை வரும் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகள் என மொத்தம் 401 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தமாக  2.3 இலட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டன.

இந்த ஆண்டுக் கணக்கெடுப்பு நாளை பிப்ரவரி 14, மறுநாள் 15 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வலசைவரும் காலத்தின் ஆரம்பப் பகுதியில் உள்ள தரவு இடைவெளிகளை (data gaps) நிரப்பும் நோக்கில் இந்தக் காலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வனக் கோட்டத்திலும் (Forest Division) குறைந்தபட்சம் 25 இடங்களிலுள்ள நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு 2 கிலோமீட்டர் நீளமுடைய கோடு வழித்தட (Line Transect) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். பல்வேறு வாழ்விடங்களில் பறவை இனங்களின் விரிவான ஆவணங்களை உறுதி செய்வதற்காக நேரடி எண்ணிக்கை மற்றும் ஒலியியல் கணக்கெடுப்பு முறைகள் இரண்டும் பயன்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் நீண்டகால கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடலை ஆதரிக்க வலுவான அறிவியல் தரவை உருவாக்குவதே ஒத்திசைக்கப்பட்ட பயிற்சியின் நோக்கமாகும்.

 இந்த மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் அனுபவம் வாய்ந்த பறவையியல் பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின்  பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் - தலைமை வன உயிரினக் காப்பாளர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.