தலைமைச் செயலகம் 
தமிழ் நாடு

கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

Staff Writer

கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும் தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் நேர்காணல் நடைபெற இருந்தது. இந்த நேர்காணல், அரசிடமிருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகள் பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திருத்தப்பட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்து, பணி நியமனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான வயது 32, பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினருக்கான வயது 39 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு 42 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை வருவாய் துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.