பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு த.வெ.க. ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:
"அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாயில்,கேரளம் 23%, ஆந்திரம் 24%, கர்நாடகம் 18%, தெலங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கியமான பொருட்களிலிருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது.
இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரத் தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை த.வெ.க. அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை த.வெ.க. அரசு உடனடியாகக் காண வேண்டும்." என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.