பனிமலை உடைந்து பேரழிவு ஏற்பட்டுள்ள நேபாளத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னரும் இதைப்போலவே ஒரு பேரிடர் நிகழ்ந்ததை சுற்றுச்சூழல்வாதிகள் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் எழுத்தாளர் நக்கீரன் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
” நேபாளம் வெள்ளப் பேரிடரில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காணாமல்போனவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் உயிருடன் மீள வேண்டும். காணொலிகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரம் ஆயிற்று. கனடாவின் புவியியலாளர் டேனியல் ஷூகர் என்பவரும் அதையே பகிர்கிறார். காணொலி திகிலூட்டினாலும் அந்தப் பிரமாண்டமான நீரின் அளவை மனம் ஏற்றுகொள்ளவில்லை என்கிறார்.
காரணங்கள் அறுதியாகவில்லை. முதலில் நிலநடுக்கம், பனிப்பாறை அதிர்வு என நகர்ந்து இப்போது GLOF (Glacial lake outburst Flood) என்பதில் வந்து நிற்கிறது. நான் நான் ஊகித்ததும் இதுதான். ஆனாலும், துல்லியமான காரணத்தை அறிய பல வாரங்கள் ஆகலாம் என்கிறார் ஷூகர்.
இதே நேபாளத்தில் GLOF நிகழ்வுக்கு வரலாற்றில் பல முன் சான்றுகள் உள்ளன. அதில் மறக்க முடியாத ஒன்று 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நிகழ்ந்தது. கிழக்கு நேபாளம் கும்பு ஹிமாலில் இருந்த ‘டிக் ட்ஷோ’ (Dig Tsho) என்கிற பனியாறு ஏரி உடைந்து இதே போன்ற பேரழிவு ஏற்பட்டது. அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள நாம் முதலில் இமயத்தின் நீரியல் சூழலை அறிய வேண்டும்.
நம் கண்களைக் கவரும் இமயத்தின் பனிப்படலம்தான் அதன் உயிர்நாடி. அது உருகுவதால்தான் அங்குப் பிறக்கும் ஆறுகளுக்கு நீர் கிடைக்கிறது. எனவே அவை பனியாறுகள் எனப்படுகின்றன. ஆனால், எல்லாப் பனியும் அப்படி உருகாது. அங்கும் துருவப்பகுதியைப் போன்று பெர்மாஃப்ரோஸ்ட் (Permafrost) என்கிற நிரந்தர உறைபனி இருக்கிறது.
ஆண்டு முழுதும் பனி உறைந்திருக்கும் நிலத்தையே ‘நிரந்தர உறைபனி’ என்பர். ஆனால், இமயத்திலுள்ள நிரந்தர உறைபனி துருவப்பகுதி போன்று படர்ந்து காணப்படாது தொடர்ச்சியற்றதாக உள்ளது. அவை அங்கு நிலவும் வெப்ப அளவைப் பொறுத்து 4000 – 6000 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.
இமயம் வயதில் மிகவும் இளையது என்பதால் உறுதியற்றது. செங்குத்தான சரிவுகளின் பாறைகள் சிறிய நடுக்கத்தில் உருளக்கூடியவை. மேல் மண்ணும் பொலபொலப்பானது. இதற்கும் கீழே அரித்தோடும் பனியாறுகள். இவை அனைத்தையும் ஒரு பசை போன்று இறுக ஒட்டி வைத்திருப்பது இந்த நிரந்தர உறைபனிதான்.
மெல்ல உருகும் பனியானது, பனி ஆற்றின் ஓரிடத்தில் தேங்கி தற்காலிகமாக ஒரு ‘பனியாறு ஏரி’யாக உறைகிறது. இதன் தடுப்புச் சுவராக பாறைகள் அல்லது உறைபனி உள்ளது. அதிலிருந்து நீரோட்டம் சிறிய அளவில் கசிந்துக் கொண்டிருக்கும். (பார்க்க படம் 1) நேபாளத்தில் இவ்வாறு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனியாறு ஏரிகள் உள்ளன,
பின்னர் ஏதோவொரு காரணமாக நிரந்தர உறைபனியில் பனிச்சரிவு ஏற்படுகிறது. முன்பு ‘டிக் ட்ஷோ’ பனியாறு ஏரியின் அருகிலிருந்த ஒரு பனிப்பாறை இவ்வாறு உடைந்ததால் ஐந்து மீட்டர் உயரத்துக்கு அலையை எழுப்பி ஏற்கனவே நிரம்பியிருந்த அந்த பனியாற்று ஏரியின் கரையை உடைத்தது. (பார்க்க படம் – 2)
பிறகு 4-6 மணி நேரத்தில் முழு ஏரியும் வற்றியது. வடிந்த வெள்ள நீர் முழுவதும், ’போதே கோசி’ ஆறு எனப்படும் இதே ‘திரிசூலி’ ஆற்றில்தான் பெருக்கெடுத்தது. பாறைகளையும் மரங்களையும் உருட்டிக்கொண்டு இதே கரிய நிறத்தில் கெடுமணம் வீசும் சேற்றுடனும் வெள்ளம் கரைபுரண்டோடி நாற்பது கி.மீ. தொலைவுக்கு பல குடியிருப்புகளையும், 14 பாலங்களையும் நாம்சே நீர் மின் நிலையத்தையும் அழித்தோடியது.
தற்போதைய வெள்ளம் குறித்து செயற்கைக்கோள் பகுப்பாய்வில், 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு பனிப் பகுதி “செங்குத்தாக சுமார் 1.2 கிலோமீட்டர் சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. அது ஏறத்தாழ 5,200 மீட்டர் உயரத்தில் உடைந்து, சுமார் 1,200 மீட்டர் கீழே உள்ள பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து அங்கிருந்த பனியாறு ஏரியை உடைத்துள்ளது. ஆக, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கதைதான்.
சர்வதேச பனிப்பாறை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இப்பேரிடரில் பனிப்பாறை சரிவுக்குத் தொடர்பு இருந்தாலும், அதுவே ஒரே காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இமயம் உலக சராசரியைவிட இரு மடங்கு விரைவாக வெப்பம் அடைந்து வருகிறது. அதன் விளைவாக பனியாறுகளின் நீரோட்டம் மெலிந்து வருகிறது.
இவ்வாறு நீரோட்டம் மெலிவது மேலும் பல பனியாறு ஏரிகளை உருவாக்க வாய்ப்பளிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். ஏற்கெனவே இருக்கும் ஈராயிரத்துக்கும் அதிகமான பனியாறு ஏரிகளில் 21 ஏரிகள் அபாயகரமானவை என்று வரையறுத்துள்ளது ஐ.நா. இவ்வளவு அபாயங்கள் நிறைந்த ஆற்றின் கரையில்தான் அவ்வளவு நெருக்கமாக எவ்வளவு கட்டடங்கள்?
2021 பிப்ரவரி 7இல் ரிஷிகங்கா வெள்ளம், 2025 ஆகஸ்ட் 5, உத்தரகாசியின் தராலியில் வெள்ளம்... இது என்ன விரும்பிக் காணும் தொலைக்காட்சி தொடரா? நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன.” என்று எழுத்தாளர் நக்கீரனின் பதிவில் கூறப்பட்டுள்ளது.