சாதிவாரிக் கணக்கெடுப்பு, முழுமையான சமூகநீதிக்கான ஆய்வை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
”ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தமிழ்நாட்டில் சமூகநீதி ஆய்வு நடத்தப்படும் என்றும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதேவேளையில், இந்த ஆய்வு வெறும் புள்ளிவிவரங்களைத் திரட்டும் நடவடிக்கையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றையும் விரிவாக ஆய்வு செய்வதாக அமைய வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சமூகத்தினரின் மக்கள் தொகை விகிதம் மட்டுமின்றி, கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலவுடைமை, அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட துறைகளில் அவர்களுடைய பங்கேற்பு குறித்தும் தரவுகள் திரட்டப்பட வேண்டும். மேலும் சமூகத்தின் உண்மையான நிலைமைகளை வெளிக்கொண்டுவருவதுடன், சாதிய ஒடுக்குமுறைகளையும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்கான உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்கவும் அடித்தளமாக அமையும்.
எனவே, தமிழக அரசு அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, விரிவான மற்றும் முழுமையான சமூகநீதி ஆய்வை நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.