எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் - பிராமி கல்வெட்டு 
தமிழ் நாடு

“கடல் கடந்து தடம் பதித்த தமிழன்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

Staff Writer

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு "கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம்." என்று கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பிரபலமான மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பழங்கால பிரமிடு கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகளில் கீறப்பட்ட கிராஃபிடி (graffiti) கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழக பேராசியர் இங்கோ ஸ்ரெளச் ஆகியோர் 2024-2025 ஆண்டுகளில் மேற்கொண்டனர். அவர்கள் ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர். அதில் 20 கல்வெட்டுகள் தமிழ் – பிராமி எழுத்து இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ரோமானிய காலகத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டு பகுதிகளுக்கும் பயணம் செய்தது உறுதியாகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.