தொல்.திருமாவளவன் 
தமிழ் நாடு

தொகுதி எண்ணிக்கையில் இழுபறி : நாளை விசிக உயர் நிலை குழு கூட்டம்!

Staff Writer

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் இழுபறி நீடித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் என அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளை வேகப்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களது தொகுதிகளின் எண்ணிக்கையை சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வருவதே இழுபறிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற விசிக, இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் (10-க்கும் மேற்பட்ட) தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை திமுகவுடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இந்த இழுபறிக்கு இடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நாளை அவசர உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட உடனடி தேர்தல் பணிகள், விசிக வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.