பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 
தமிழ் நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! 93.8% தேர்ச்சி!

Staff Writer

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவர்கள் 91.74 சதவீதமும் மாணவிகள் 95.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.8%

கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு வெளியிட்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.அதைத் தொடர்ந்து 95.76% உடன் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடியும், 97.25%உடன் மூன்றாம் இடத்தில் விருதுநகரும், 96.66% உடன் நான்காம் இடத்தில் குமரியும், 95.51% உடன் ஐந்தாம் இடத்தில் திருச்சியும்  இடம்பிடித்தன.

மேலும் பிற மாவட்டங்களில் தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:

 கோவை 96.47%, பெரம்பலூர் 96.46%, அரியலூர் 96.38%, தர்மபுரி 96.31%,  கரூர் 96.24%, ஈரோடு 96%, தஞ்சாவூர் 95.27%, திருவாரூர் 95.27% , தென்காசி 95.26%, விழுப்புரம் 95.09%, காஞ்சிபுரம் 94.85%, திருப்பூர் 94.8.4%, கிருஷ்ணகிரி 94.64%, கடலூர் 94.5 1%, திருநெல்வேலி 94.16% ,மதுரை 93.93%, மயிலாடுதுறை 93.90%, இராமநாதபுரம் 93.75%, புதுக்கோட்டை 93.53%, திண்டுக்கல் 93.28% ,உதகை 93.2 6%, திருவண்ணாமலை 93.10%, திருப்பத்தூர் 92.86% ,சேலம் 92.17%, நாகை 91.58%, தேனி 91.58%, ராணிப்பேட்டை 91.30%, சென்னை 90.73%, செங்கல்பட்டு 89.82% ,திருவள்ளூர் 89.60%, கள்ளக்குறிச்சி 86.91%,வேலூர் 85.4%, காரைக்கால் 93.60, புதுச்சேரி 97.37%

இத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் எட்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 346, கணிதத்தில் 1996,  அறிவியலில் 10,838, சமூகஅறிவியலில் 10,256 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

 அரசு பள்ளி மாணவர்கள் 91.26% தேர்ச்சியும் தனியார் பள்ளி மாணவர்கள் 97.99% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.1290 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 11,406 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.237 சிறைப்பள்ளி மாணவர்களில் 230 பேர் தேர்ச்சி.

 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 86.10%. கடந்த ஆண்டை விட இது ஏழு சதவீதம் அதிகமாகும்.

சென்னை மாநகராட்சியில் சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை நான்கு முதல் துணைத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. துணைத் தேர்வு எழுத விரும்புவோர் மே 22 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணை தேர்விற்கான அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.