சென்னை உயர்நீதிமன்றம்  
தமிழ் நாடு

28 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி! 80% ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Staff Writer

சட்டப்படி அனுமதி கிடையாதுதான். ஆனாலும் நீதிமன்றமே விதிவிலக்கு அளித்து அரிதான ஓர் அனுமதியை வழங்கி இருக்கிறது. ஆம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஓரு  பெண்ணின் 28 வார கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட 24 வார கால வரம்பை மீறினால் கருவைக் கலைக்க அனுமதி இல்லை. ஆயினும் இந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

என்ன காரணம்?

பாதிக்கப்பட்ட பெண் 80% ஊனமுற்றவர். நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பெண்ணின் தாயார் கடந்த ஏப்ரல் மாதம் தன் மகளின் வயிறு உப்பி இருப்பது கண்டு சந்தேகப்பட்டு விசாரித்தபோது அவருக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வெளியே சொல்லக்கூடாது என மிரட்டப்பட்டிருந்தார். அந்த பெண்ணும் கருவுற்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு செய்ய உயர்நீதிமன்ற அனுமதியை நாடினார் அப்பெண்ணின் தாயார்.  இந்த பெண் 80% ஊனமுற்றவர் என்பதால் இதற்கான சிறப்பு அனுமதியை வழங்கிய நீதிமன்றம், இதற்கான ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, அவர்கள் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பானது என்றால் கருக்கலைப்பு செய்யலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.