தமிழ்நாட்டு அரசின் வருடாந்திர தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது.
”இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் திரு. குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.” என்று தமிழ்நாட்டு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வரும்15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, வேலூர் மாவட்டம் - குடியாத்தம் காக்கா தோப்பு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமரி அனந்தனை அவரின் மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை நேரில் சென்று பார்த்தார். தன் தந்தையிடம் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் பெற்றதாக அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.