அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெருவிழா என்ற பெயரில் அவரது நினைவு நாளை ஒட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். டிஸ்கவரி புக் பேலஸில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் ராம குருநாதன் தலைமை வகித்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறக்கட்டளைத் தலைவர் இலக்கியமாமணி மெய். ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
முதலில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் பிருந்தா சாரதி பட்டுக்கோட்டையாரின் பாடல்களைப் பாடி அதில் பொதிந்துள்ள கருத்துகளை விளக்கினார்.
அடுத்த சிறப்புரையாக திரைப்பட வசனகர்த்தாவும் பாடலாசிரியரும் கவிஞர் மருதகாசியின் புதல்வருமான கவிஞர் மருத பரணி சுவாரசியமான பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டது கவனிக்கத்தக்க வகையில் இருந்தது.
" எனது தந்தை மருதகாசி அவர்களுக்கும் கவிஞர் பட்டுக்கோட்டை அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இரண்டு கவிஞர்கள் ஒன்று சேர்ந்தால் அருகில் ஒரு காவல் நிலையம் வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.ஆனால் அவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்திற்குப் பாடல் எழுதினாலும் கூட அவர்களிடம் அந்த நட்பு இருந்தது .
உடுமலை நாராயண கவிராயர் என் தந்தையை எப்படி தனது சகோதரனைப் போல் பாவித்தாரோ அப்படியே என் தந்தையும் பட்டுக்கோட்டையாரை தனது தம்பியை போல் நினைத்தார். அன்பு காட்டினார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பாட்டு எழுதிவிட்டு மதியம்உணவு சாப்பிடுவதற்கு ஒரே காரில் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
இடைவேளையில் எனது சித்தப்பா இன்று என்ன பாட்டு எழுதினீர்கள் என்று கேட்பாராம். அப்போது கேட்டபோது ஒரு முறை அவர்
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா'
என்ற பாட்டை எழுதியதாகக் கூறி இருக்கிறார்.
எங்கள் வீட்டில் பிள்ளைகள் அதிகம். நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் பிள்ளைகள். இரண்டு கார்களில் அடைத்துக்கொண்டுதான் பள்ளிகளுக்குக் கொண்டு போய் விடுவார்கள். அப்படித்தான் நாங்கள் பள்ளிக்குச் செல்வோம்.
அதை மனதில் வைத்துத்தான் அப்படியே உல்டாவாக எழுதியிருக்கிறார்.
பட்டுக்கோட்டையார் உயரமாக இருப்பார். அவரை குடும்பத்தில் நெட்டை வாத்தியார் என்று அழைப்பார்கள். எனது அண்ணனும் அக்காவும் அவரது இரு கையிலும் தொங்கிக் கொண்டு தட்டாமாலை சுற்றுவார்கள். அவரும் அப்படியே சுற்றுவார். பட்டுக்கோட்டையாரும் என் அப்பாவும் மாடர்ன் தியேட்டர்சுக்கு பாடல் எழுதினார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ்ல சுந்தரம் எதிரே யாரையும் உட்காரச் சொல்ல மாட்டாராம். அப்படிப்பட்டவரே பட்டுக்கோட்டையாருக்கு மட்டும் இருக்கை போட்டு அமர வைத்தாராம்.
'பாசவலை' படத்தில் 'அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை' பாடலை என் அப்பா மருதகாசி எழுதினார். அதே படத்தில் பட்டுக்கோட்டையும் எழுதி இருக்கிறார்.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த 'தாய்க்குப் பின் தாரம்' என்கிற தேவர் படத்தில் என் தந்தை மருதகாசி, ' மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே' பாடலை எழுதினார். ஆனால் அப்போது தம்பிப் பயலே என்பது மரியாதை குறைவாக இருப்பதாக எம்ஜிஆர் நினைத்தார். அந்த வார்த்தையை மாற்றச் சொன்னார். ஆனால் அப்பா மாற்றவில்லை. அந்தப் பாடல் எழுதிய படியே தான் வந்தது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கசப்பு வந்ததாகச் சொல்வார்கள். அதன் பிறகு நீண்ட காலம் எம்ஜிஆருக்கு அப்பா எழுதவில்லை. ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் நடித்த 'திருடாதே' படத்திற்கு 'சின்னப் பயலே சின்னப் பயலே செய்தி கேளடா' பாடலை பட்டுக்கோட்டையார் எழுதினார். அப்போது எம்ஜிஆர் இந்த பாட்டில் பயலே என்று வந்தது பற்றி எதுவும் சொல்லவில்லையாம். அப்போது வந்து அப்பாவிடம் பட்டுக்கோட்டையார் சொன்னார். ‘ அந்தத் தம்பிப் பயலே பாடல் மூலம் எனக்கு சின்ன பயலே பாடலுக்குப் பாதை போட்டுக் கொடுத்து விட்டீர்கள். அதனால் எம்.ஜி.ஆர் ஒன்றும் சொல்லவில்லை’ என.
என் தந்தையார் விவசாயிகள் தொழிலாளிகள் பற்றி பாடல் எழுதியிருந்தாலும் அவற்றையும் பட்டுக்கோட்டையார் பாடல் என்று பலரும் நினைத்துக் கொள்வது உண்டு. அந்த அளவிற்குப் பட்டுக்கோட்டையார் விவசாயம் சார்ந்து எழுதிய பாடல்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
பட்டுக்கோட்டையார் தனது அனுபவங்களிலிருந்து வாழ்க்கையில் இருந்தும் எடுத்து எழுதியதால் தான் அவரது பாடல்கள் பேசப்படுகின்றன. 'திருடாதே பாப்பா திருடாதே' பாடலில் எவ்வளவோ சொல்லிக் கொண்டு செல்பவர் கடைசியில் 'திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று சொல்வார். அதுதான் வாழ்க்கையில் இருந்து அவர் பெற்றுள்ள வரிகள்.
விவசாயிகள் எப்போதும் சுபிட்சமாக இருப்பதில்லை. அதை பற்றி அவர் பேசும்போது : காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம் ? 'என்று கூறியிருப்பார்.இதெல்லாம் அனுபவத்தில் இல்லாமல் எழுத முடியாது.
'சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி' பாடலில் நூல் நூற்கும் தறி ஓட்டத்தை அழகாக எழுதி இருப்பார்.'ஒற்றுமையோடு அத்தனை நூலும் ஒழுங்காய் வந்தால் வளரும் ;இதில் ஒரு நூல் அறுந்தால் குளறும்' என்று தறியில் ஓடும் நூல் பிசகினால் அந்த ஆடையே குலைந்து விடும் என்பதைக் கூறியிருப்பார். அதைவிட 'இதில் ஓட்டம் ஏறி கூட்டுறவாலே உலகில் தொழில் வளம் உயரும்'என்று உலக கூட்டுறவு தொழில் வளம் பற்றிக் கூறியிருப்பார்.
அவர் இறக்கக் கூடாத 29 வயதில் இறந்தவர். பட்டுக்கோட்டையார் பாடல்கள் தமிழகத்தோடு தமிழ் மக்களோடு நின்று விடக்கூடாது. அகில இந்தியாவிற்கும் பரவவேண்டும்.சென்று சேர வேண்டும்.
அதற்கு என்னாலான ஒரு முயற்சியாக ஒன்றைச் சமீபத்தில் செய்தேன்.
தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மா 'பைரவ கீதா' என்றொரு படம் தயாரித்தார். அந்த படம் பலமொழிகளில் மொழிமாற்றுப்படமாக உருவாக்கப்பட்டது. ஒரிஜினலாக உருவான தெலுங்குப் படத்தில் ஒரு பாடல் இருந்தது. அந்தப் பாடல் தெலுங்கில் 'புட்டலோனா வேலு பெடித்தே சீம குட்டதா?
சிட்டி சிலக்கா தோட்ட கொஸ்தே பண்டு குட்டதா? ' என்று தொடங்கும். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'எறும்பு புற்றுக்குள் விரலை விட்டால் எறும்பு கடிக்காதா? பச்சைக்கிளி பழத்தோட்டத்திற்கு வந்தால் பழத்தை கொத்தாதா?' என்பதுதான் அர்த்தம்.
அந்தப் படம் தமிழுக்கு மொழிமாற்றுப் பாடலாக உருவான சந்தர்ப்பத்தில் நான் அந்த வரிகளை மாற்றி தமிழில் 'பட்டுக்கோட்டை பாட்டுக் கோட்டை பார்த்ததில்லம்மா. கண்ணதாசன் மருதகாசி நானும் இல்லம்மா. வாலி வைரமுத்து பாட்டு கேட்டதுண்டம்மா. அதுக்கு மேல நானும் பாட பாட்டு ஏ தம்மா' என்று எழுதி இருந்தேன்.
இதன் பொருளை அந்தப் படத்தின் எழுத்தாளர் சிரஶ்ரீ விளக்கச்சொல்லிக் கேட்டார். நான் பட்டுக்கோட்டையார் என்று எழுதி இருந்ததைப் பார்த்து அவர் யார் அவரை எனக்குத் தெரியாது. அந்த வார்த்தைகளை மாற்றுங்கள் என்றார்.நான் பட்டுக்கோட்டையார் பற்றிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தேன் . அதைப் படித்துப் பார்த்தவுடன் அவர் அதற்குப் பிறகு அந்த வரிகளை அனுமதித்தார். அதனால்தான் சொல்கிறேன் பட்டுக்கோட்டையை இந்தியா முழுக்கக் கொண்டு செல்ல வேண்டும்" இவ்வாறு மருதபரணி பேசினார்.
முன்னதாகக் கவிஞர் பூங்கோதை ஒருங்கிணைப்பில் சுமார் பத்து பேர் பங்கேற்ற 'பட்டுக்கோட்டைக்குப் பாமாலை' என்கிற புகழஞ்சலியும் இடம்பெற்றது. நிறைவாகக் கவிஞர் கோ.பாண்டியன் நன்றி கூறினார்.