ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
பா.ம.க. செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு எப்படி நடக்கும் என இலக்கணங்கள் இருக்கின்றன. பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்காக செயற்குழுவில் அது குறித்து விவாதிப்பார்கள். விவாதித்த பின்னர் செயற்குழுவில் இருந்து பொதுக்குழுவிற்கு கொண்டு வருவார்கள். இது தான் நடைமுறை.
அதிலும் செயற்குழு என்பது சில நேரங்களில் ஒரு அரங்கில் நடைபெறும். பொதுக்குழு என்பது வேறு அரங்கில் நடைபெரும். அதனை தலைவர்கள் மட்டும் நடத்துவாரகள். விவாதித்து முடிவு எடுப்பார்கள்.
இந்தியாவில் முதல் முறையாக செயற்குழுவும், பொதுக்குழுவும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடத்திய ஒரு கேலி கூத்து சேலத்தில் நடந்திருக்கிறது. அவர்கள் சொன்னது இதனை பாமக பொதுக்குழு என்று சொன்னார்கள். இன்று நடைபெற்றது பாமகவின் பொதுக்குழு அல்ல. பொதுக்குழு கட்சியின் செயலாளர், தலைவரால் கூட்டப்பட வேண்டும். அப்படியும் இது கூட்டப்பட வில்லை. இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாமக கட்சியினை கட்டுப்படுத்தாது. எனவே இது பொதுக்குழு அல்ல.
முதலில் 10.04.2025இல் ராமதாஸ் தன்னை தானே தலைவர் என்று அறிவித்தார். பின்னர் 29.05.2025ஆம் தேதி தலைமை நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக அறிவித்ததாக அறிவிப்பு வெளியானதாக தகவல் வெளியானது. ஆனால் இது வரை அப்படி ஒரு நிர்வாக குழு நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை. 08.07.2025இல் செயற்குழு நடைபெற்றது. அதில் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதாக சொன்னார்கள். 17.08.2025இல் சங்கமித்திராவில் பொதுக்குழு நடத்தினர். அதனுடைய முடிவுகளை டெல்லிக்கு அனுப்பினார். அதனை டெல்லி நிராகரித்தது.
அதற்கு முன்னர் 9.08.2025 அன்று மகாபலிபுரத்தில் நாங்கள் நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அன்புமணியின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி வரை நீட்டித்து ஒரு உத்தரவு கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார்கள்.
அதற்கு பிறகு ராமதாஸ் தரப்பில் நிறைய கடிதம் கொடுத்ததாக சொல்கிறார். அன்புமணிதான் தலைவராக இருக்கிறார் என்கிற சான்றுகள் எங்களிடம் உள்ளது. வேறு பதிவுகள் எங்களிடம் இல்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று தான் டெல்லி சொன்னது.
ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதிக் கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. இந்த கேலிக்கூத்துக்கு காரணம் ஜி.கே.மணி. தமிழக அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சினையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது. ராமதாஸ் தரப்பு வெளியிடும் போலி அறிவிப்புகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறினார்.