முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

“அதிமுக - பாஜக கூட்டணி மிரட்டலால் உருவான BLACKMAIL கூட்டணி...!”

Staff Writer

“அதிமுக - பாஜக கூட்டணி மிரட்டலால் உருவான BLACKMAIL கூட்டணி” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை உறுதிபட தன்னால் கூற முடியும் என்றும், பெண்கள்தான் நாட்டின் பவர் ஹவுஸ் எனவும் குறிப்பிட்டார்.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (ஜன. 26) நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ''திராவிட இயக்கக் கோட்டை தஞ்சாவூர். வெல்லும் தமிழ்ப்பெண்களுக்கு தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

ஆண்களால் வீட்டின் வாசல் வரைதான் செல்ல முடியும். ஆனால், பெண்களால் அந்த வீட்டின் சமையலறை வரை செல்ல முடியும். ஏன்? அந்த வீட்டில் உள்ளவர்களின் மனதில் கூட இடம்பிடிக்க முடியும்.

திராவிட இயக்கத்தின் திட்டங்களை மற்றவர்களிடம் பெண் நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பெண்கள்தான் பவர் ஹவுஸ். பெண்களையும் இளைஞர்களையும் நான் அதிகம் நம்புகிறேன். நமது திட்டங்கள், மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்கும்.

பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை, சமூக நீதி விடுதிகள், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு அளித்துள்ளது.

நான் முதல்வரானதும் முதலில் போட்ட கையெழுத்து மகளிர் விடியல் பயணத்துக்குத்தான். உள்ளாட்சியில் 50% தந்து பெண்களுக்கு அதிகாரமளித்து திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சாதி ஒழிப்பு மட்டுமே திராவிட கொள்கையல்ல, பெண் விடுதலையும்தான். சாதி ஒழிப்பை நடத்தியவர் பெரியார். சுயமரியாதை திருமணம் நடத்தியவர் அறிஞர் அண்ணா. காவல் துறை, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு தந்தது கலைஞர் கருணாநிதி.

தில்லியில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அபாண்டமாக பொய் கூறுகிறார். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்று என்னால் அடித்துக் கூற முடியும்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கு அவரிடம் பதில் இல்லை. மணிப்பூரில் 3 ஆண்டுகளாக அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது பிரதமருக்கு தெரியவில்லையா?

தில்லியில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறது பாஜக. எத்தனை கெட்டப் மாற்றினாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.

தேர்தலில் தோல்வியைத் தழுவிய கூட்டணியையே மீண்டும் புதுப்பித்துள்ளனர். அமித் ஷாவின் கட்டாயத்தால் உருவாகியுள்ள BLACKMAIL கூட்டணி இது.

பதவியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ள கூட்டணிதான் இது. பாஜக -அதிமுக கூட்டணிக்கு தமிழக மகளிர் தக்க பதிலடி கொடுப்பார்கள்'' என முதல்வர் பேசினார்.