2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்த காரணத்தினால், சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம்.
அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மை பத்தி, வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டது. இதை எல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எறியத்தான் போகிறோம்.
இந்த கரூர் உடன் சேர்த்து ஐந்து,ஆறு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு எல்லாம் நடத்தி இருக்கிறோம். அங்கு எல்லாம் கடைசி நிமிடம் வரை எங்களுக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுப்பார்களா, மாட்டார்களா என்று இப்படி இழுத்தடித்து கொண்டு இருப்பார்கள்
தமிழக சட்டப்பேரவையில் நமக்கு எதிராக நிகழ்ந்தப்பட்ட ஒரு உரைக்கு, ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் செய்ய விருப்பம் இல்லை என்று அடிக்கடி சொல்லும் முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்தார்.
பெருந்தன்மையை பெயர் அளவில் மட்டும் பேசும் முதல்வர், அக்.15 அன்று தமிழக சட்டசபையில் நமக்கு எதிராக பேசிய பேச்சில், எவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தினார் என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
அரசியல் செய்ய விருப்பமில்லை என்று அடிக்கடி கூறும் முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் நம் மீது அவதூறுகளைக் கொட்டி வன்மத்தைக் கக்கினார். குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகள். உங்கள் கபட நாடகத்தைக் தாங்கி பிடிக்க முடியாமல் உங்கள் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது உங்களுக்கு மறந்துவிட்டதா?
கரூர் சம்பவத்துக்கு அவசர அவசரமாக ஒரு தனிநபர் ஆணையம். செய்தியாளர் சந்திப்பு. இதெல்லாம் ஏன் நடக்கிறது என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
தனி நபர் ஆணையத்தின் தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.டி. அமைத்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை வைத்து திமுகவினரும் அவர்களுக்கு ஒத்து ஊதுவோரும் விந்தோதி விழா எடுத்தீர்கள் இல்லையா? எந்த ஆவணத்தின் அடிப்படையில் எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் மவுனம் காத்தனர். இதையும் முதலமைச்சர் மறந்துவிட்டாரா?
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவுமே இல்லாமல், அரசியல் ஆட்டத்தை ஆடினார் முதல்வர்.
மக்களுக்கும் இந்த அரசு மீது இருக்கும் நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதுவும் முதல்வருக்கு புரியவில்லை என்றால், 2026 தேர்தலில் மக்கள் அழுத்தமாக புரிய வைப்பார்கள்.
இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியாக இருக்கபோகிறது. எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் எவர். இந்த இடையூறு தற்காலிகமானதுதான். பயணத்தில் தடம் மாறமாட்டோம்.
வரும் 2026 தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி. இந்த போட்டி இன்னும் உறுதியாகப் போகிறது நூறு சதவீதம் வெற்றி நமக்கே. வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்.” என்று பேசினார். வெற்றி