தவெக தலைவர் விஜய் பனையூரை விட்டு வெளியே வருவதில்லை என்ற விமர்சனத்துக்கு "ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள் தான்." என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: “தைரியம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. தைரியம் தான் எல்லாவற்றுக்கும் பவர். அந்த பவர் எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா? நம்மை குறைத்து மதிப்பிடுகிற தருணத்தில், நம்மை ஏளனமாக பார்க்கும் தருணத்தில்.
நம்மை யார் என்று காட்டவேண்டிய தருணம் வரும். எந்த விஷயத்தில் நம்மை கேலியும் கிண்டலுமாக பேசுகிறார்களோ, அந்த விஷயத்தை நேர்மறையாக மாற்றுவதில் இருக்கிறது. அங்கிருந்துதான் அந்த பவர் தொடங்குகிறது.
‘ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா... பனையூரை விட்டு வெளியே வா...’ என சொல்கிறவர்களுக்கு, என் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா? என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கும் கேலி கிண்டல் செய்பவர்களுக்கும் ஒன்றை சொல்கிறேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலமாக இருக்கலாம். எனக்கு தமிழ்நாடு தான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் என் வீட்டு மக்கள். என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த இந்த சொந்தங்களுக்கு இந்த விஜய் பாதுகாவலனாக இருப்பான்.
விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. நீதி கேட்டுத்தான் வந்திருக்கிறேன். இந்த விஜய் தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது தப்பா?
மற்ற கட்சிகளுக்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பார்கள். ஆனால் நமக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுக்கவும் விடமாட்டார்கள். Standard Operating Procedure (SOP) என்பது Stalin Sir Operating Procedure. இது என்ன நியாயம்?
நமக்கு எதிராக சதி செய்வது யார்? சூழ்ச்சி செய்வது யார்? பழி போடுவது யார்? யாரெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதையெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதனால் தான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்.
செல்ஃப்பே எடுக்காத அரதப்பழசான அரித்மெட்டிக் கணக்கு. இதெல்லாம் வேலைக்கே ஆகாது என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன். பணம் கொடுத்து வாக்கை வாங்கிடலாம் என்று நினைக்கிறார்கள். அது இனி நடக்காது.
வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள் 1000, 2000, 3000, 4000, 5000 என. சாமி மேல் சத்தியம் வாங்குவார்கள். அப்படித்தானே இத்தனை வருடமாக ஏமாற்றி இருக்கிறார்கள். சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம் தாம். வாங்கிக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்.
வீட்டில் உள்ள சின்ன பிள்ளைகளுக்கு ஒன்று சொல்கிறேன். உங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லுங்கள்.
நமக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது. நம்முடைய அரசியல் எதிரி யார் என்பதை அறிவித்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
அனுபவம்... அனுபவம்... அனுபவம்... என்று சொல்கிறார்களே, அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தை தாண்டி வேறு ஏதேனும் கொம்பு முளைத்த பெரிய அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அரசியல்வாதிகளாக இருக்கும் இவர்களுக்கு ஒரு சாவல். என்னை மாதிரி தனியாக கட்சி ஆரம்பித்து, ஒரு சதவீதம் வாக்கு வாங்கும் அளவுக்கு இவர்களுக்கு திராணி இருக்கிறதா? இந்த இரண்டே வருடத்தில் தனி சக்தியாக வளர்ந்திருக்கும் நமக்கு அனுபவம் இல்லையாம்...
எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை தான். அதெல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் போதும் நல்லாட்சியை கொடுக்கலாம்.
சூப்பரான ஒரு நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். அதை செய்து காட்டுகிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடம் ஆகிறது. இப்போது ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டி, உங்களின் கனவுகளை சொல்லுங்கள் செய்கிறோம் என்கிறார்கள். உங்களின் ஆட்சியை தூக்கிவிட்டு, அந்த இடத்தில் தவெகவை வைப்பதுதான் மக்களின் கனவு.
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு out of control என்பார் ஸ்டாலின் சார். அவரின் out of control எது என்பதை நான் சொல்கிறேன். சட்ட ஒழுங்கில் out of control. பெண்கள் பாதுகாப்பில் out of control. வேலை வாய்ப்பில் out of control. மொத்தத்தில் அவரின் ஆட்சியே out of control தான்.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் சார் சொல்கிறார். எத்தனையோ போராட்டங்கள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியை விட்டு போகும் போது கூட பொய் பொய்யாக அடித்து விடுகிறீர்கள். அதற்கு தேர்தல் வாக்குறுதிகளே சான்று.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்றால் டிஜிபி வேண்டும். முதலில் டிஜிபியை போடுங்கள்.
மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான் நமது கடமையே. நம்முடைய தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை தரமாட்டேன்.
தவெக – திமுக இடையேதான் போட்டியே. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதனால் தான் ஆட்சியில் உள்ள கட்சியை எதிர்க்கிறோம். மக்கள் விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டுமா? என்பது தான்.
விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? சமூக நீதிக்கான நல்லாட்சியை அமைப்போம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற பாம் இப்போது தமிழக அரசியலில் வெடித்துக் கொண்டிருக்கிறது.” என்று விஜய் பேசினார்.