அமைச்சர் கோவி. செழியன் 
தமிழ் நாடு

"ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை" - கோவி செழியன்

Staff Writer

ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இந்த ஆண்டு முதல் நாளில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். மேலும் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து, இன்று நடைபெற்று வரும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என். ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் பரப்புவதுடன் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்றும் ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.