“ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீதான இந்தியா கூட்டணியின் பொய்களை பீகார் மக்கள் புறந்தள்ளியுள்ளனர்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பை எட்டி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: “பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணியின் பொய்களையும், ஜனநாயகத்தை காக்கும் அமைப்புககளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர். கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அதிமுக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அவரின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலுவான வெற்றி பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.