சவுக்கு சங்கர் 
தமிழ் நாடு

நீண்ட நேரம் காத்திருந்து சவுக்கு சங்கரை கைது செய்த காவல் துறை... பின்னணி என்ன?

Staff Writer

வீட்டின் கதவை உடைத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கத்தில் இன்று (டிச.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைதும் செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இதனிடையே, இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, போலீஸார் இன்று காலை அவரது வீட்டை சுற்றி வளைத்தனர்.

வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. இதனையடுத்து, வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது. இந்நிலையில், தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.