அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ளது. அவர்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும். அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த குற்றச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மட்டுமில்லாமல் வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம். ஆகவே தமிழக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. முற்றாக அனுமதி மறுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், எதிர்க்கட்சிகளுக்குப் போராடுவதற்கான அனுமதி வழங்க வேண்டும்.