திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

“மக்களுக்குப் பிடித்தவருக்கே சீட்” - ஸ்டாலின்

Staff Writer

“மக்களுக்குப் பிடித்தவருக்கே சீட்.” என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தசூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 16) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் கூறுகையில், “நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23க்கு இன்னமும் 39 நாள்கள் மட்டுமே உள்ளன.

தேர்தல் பணியில் நம் கழகம் தான் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. தேர்தல் களம் என்று வந்துவிட்டால் திமுகக்காரர்கள் சுழன்று சுழன்று பணியாற்றுவார்கள் என்று பத்திரிக்கையாளர்களும் எதிரிகளுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்கியது, 1.31 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அளித்தது, முதியோர் , மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 40 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கியது உள்ளிட்ட நலத்திட்டங்களால் பொது மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு பெருமளவு கூடியுள்ளது.

அதேபோல கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து மிக பலமான கூட்டணியைக் கட்டியிருக்கிறோம்.

கூட்டணி வலிமை, நலத்திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவைகளால் நாம் தான் வெல்வோம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்.

களம் எல்லாவகையிலும் நமக்கு சாதமாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

கடந்த ஓராண்டு காலமாக உழைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலம் இது. இனி வரும் நாட்கள் ரிலே ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டை அடைவதற்கு ஓடுவது போலத்தான். நம்மில் ஒருவர் கூட சுணங்கிவிடக் கூடாது. இதுவரை போட்ட உழைப்பை விட இரண்டு மடங்கு உழைப்பை அளித்து, வெற்றியை அறுவடைசெய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரின் தோளிலும் உள்ளது.

தேர்தலில் நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்றுங்கள்.

தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்க கூடாது தனிப்பட்ட மனஸ்தாபங்கள் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்கமுடியாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாய் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன். இதை ஒவ்வொரு நிர்வாகிக்கும் சொல்லிவிடுங்கள். தனிப்பட்ட நிர்வாகிகளைவிட எனக்கு கழகத்தின் நலன்தான் முக்கியம். தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே நடவடிக்கை பாயும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுல 234 தொகுதி இருக்கு இதில நம்ம தொகுதியில நடப்பது தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்ல… 234 தொகுதிகளிலும் கண்ணும் காதும் இருக்கு. அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில வந்திடும். இப்பவும் வந்திட்டு தான் இருக்கு. 

உங்கள் பொறுப்பில் இருக்கும் அத்தனை தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே நீங்கள் வென்றதற்கு சமம். அடுத்த முறை அமையவுள்ள நமது ஆட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அமைச்சர் பதவி என்பது அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை அழுத்தம் திருத்தமாக இப்பொழுதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கழகத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட். வெற்றிவாய்ப்புள்ள உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட்.

தான் மட்டுமின்றி பிறரையும் வெற்றி பெற வைத்து கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்கு பிறகு தேடி வரும்.

களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது. வென்று வர தயாராகுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.