செங்கோட்டையன் - விஜய் 
தமிழ் நாடு

செங்கோட்டையன் அந்தக் கட்சியில் சேருகிறாரா? அமைப்புச் செயலாளர் பதவி? வைரலாகும் தகவல்!

Staff Writer

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை மறுநாள் (நவ.27) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது.

இந்த நிலையில், அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் சட்டமன்ற உறுப்பினர். ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் என பலத்தோடு இருந்த செங்கோட்டையனைத் தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் நீக்கத்துக்குப் பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை.

செங்கோட்டையனின் அடுத்து முடிவு என்னவாக இருக்கும் எதிர்பார்ப்பு இருந்து வரும் சூழலில், அவர் நாளை மறுநாள் (நவ.27) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதை செங்கோட்டையன் இதுவரை மறுக்கவில்லை.

இதுதொடர்பான தகவலை தவெக தரப்புதான் வெளியிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

என்ன விவரம் என்று விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது, “குழப்பமான மனநிலையில் இருக்கும் செங்கோட்டையனுக்கு ’இதுதான் சந்தர்ப்பம்’ என்று கால் அடித்துப் பேசியிருக்கிறார் தவெகவின் ஆதவ் அர்ஜுனா. ’உங்களைப் போன்ற சீனியர்கள் தவெகவுக்கு வந்தால் கட்சிக்கு நல்லது’ என பொடி வைத்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையனும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். அவர் தவெகவில் இணைந்தால் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கவும் விஜய் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.” என்றனர்.

அதே நேரத்தில், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அதன்பிறகு, அவர் புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என்பது தெரியவரும்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனும், ஓ. பன்னீர்செல்வமும் ஒருவேளை தவெகவில் இணைந்த பிறகு, தவெக அதிமுகவுடன் கூட்டணிக்குப் போனால், எடப்பாடி பழனிசாமியை அவர்கள் வரவேற்காமலா போய்விடுவார்கள்…?