சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் 
தமிழ் நாடு

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Staff Writer

சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற  உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.  

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று” இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிவுறுத்தலை எதிர்த்தும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது.

சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் என மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என்று தமிழக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.