திருப்பரங்குன்றம் கல் தூண் 
தமிழ் நாடு

“அந்த தீர்ப்பு தீபத்தூண் என்பதை உறுதிப்படுத்தவில்லை...”

Staff Writer

மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றக்கூடிய தூண்தான் என உறுதி செய்யாமல் பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் கல்தூணில் தீபம் ஏற்றாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி. ஆகியோர் ஆஜராக தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடுசெய்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு முன் தொடங்கியுள்ளது.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பலரும் இடையீட்டு மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்க மறுத்தனர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல. அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை வழங்கப்படவில்லை. 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் இல்ல.

1994இல் இருந்து தான் பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 2014 இல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ளது சர்வே தூண்தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மலை உச்சியில் உள்ளது சர்வே தூண்தான். மலையில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது. மற்றவை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என தெரிவித்தார்.

பதற்றமான சூழலை உருவாக்க கூடிய வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மனுதாரருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் கிடையாது. கோயில் நிர்வாகம் மட்டுமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. இதில் ஆகம விதிகளுக்கு எதிராகவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்ய முடியாது.

தர்கா அருகே தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கூறுவது தேவையில்லத பிரச்சனையை உருவாக்கும். மோட்ச தீபம் ஏற்றக்கூடிய இடம் என்று மனுதாரர் தரப்பில் ஆதாரம் இல்லாத தகவல்கள் சொல்லப்படுகிறது.

இரு தரப்பினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலில் தேவை இல்லாமல் மாற்று இடத்தில் தீபம் ஏற்ற கூடாது என நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் தீர்ப்பையும் சுட்டி காட்டி உள்ளனர்.

ஏற்கனவே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும் வழக்கறிஞர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.

பொது அமைதியை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமையாக இருக்க முடியும். அதையேதான் அரசு செய்துள்ளது என வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.