மாரிசெல்வராஜ் 
தமிழ் நாடு

“அலையும் இளைய தலைமுறை” - அரசுக்கு மாரிசெல்வராஜ் கோரிக்கை!

Staff Writer

இளைய தலைமுறையை நேர்படுத்த கொடூரமான போதை கலாசாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் இயக்குநர் மாரி செல்வராஜ், “சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.

கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.