ஓபிஎஸ் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, ‘அதெல்லாம் மேல்மட்ட விஷயம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று பாஜகவினரும் அதிமுகவினரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அர்ஜுன் மேக்வால் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, ஓபிஎஸ் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக இன்று (டிசம்பர் 24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘அதெல்லாம் மேல்மட்ட விஷயம். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார். இந்த கேள்விக்கு நான் இப்போது கருத்து சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.
முன்பெல்லாம் டிடிவி ஓபிஎஸ் பற்றி கேள்வி கேட்டால் ஒரு திடமான பதிலை சொல்வீர்கள், இப்போது அப்படி சொல்லவில்லையே என்ற கேள்விக்கு,
‘எப்போதுமே கடுமையாக விமர்சனம் செய்பவர்களை நானும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னிடம் வாங்கி கட்டி கொள்ளாதவர்கள் யாருமே கிடையாது. அப்படி பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது’ என்றார்.
நேற்று நடைபெற்ற மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ’அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கருத்தை பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் சொல்வார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது பாருங்கள்.‘ எனக் குறிப்பிட்டார்.
பூப்போன்ற அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்திலிங்கம் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘அதிமுக பூமாலை கிடையாது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். வலிமையான கோட்டை. இதை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது.உதிர்ந்த செங்கற்கள் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது ‘ என்று பதில் அளித்தார் ஜெயக்குமார்.